Back to WTSC Information Booklet 2025
எமது பாடசாலையும் அதன் வரலாறும்
வென்ற்வேத்வில் தமிழ்க் கல்வி நிலையமானது, 1988ம் ஆண்டு புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சிறார்களுக்குத் தமிழ் மொழிக்கல்வியுடன் தமிழர் பாரம்பரியங்கள் மற்றும் கலை கலாசாரங்களையும் புகட்டும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
நடப்பு வருடத்தின் ஆடி 31ம் திகதி அன்று (July 31st) மூன்றரை அல்லது அதற்கும் கூடிய வயதை எய்தும் சிறார்கள் அனைவரும் பாடசாலையில் சேர்வதற்கு தகுதி உடையவராவர். பாலர் பள்ளி முதல் உயர்தரம் வரை தற்போது எமது பாடசாலையில் 700ற்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் கற்கின்றார்கள். 2010ம் ஆண்டு முதல் நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநில உயர்தரப் பரீட்சையில் பல மாணவர்கள் எமது பாடசாலையிலிருந்து தமிழ்ப் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இவர்களது சிறந்த பெறுபேறுகள் எமது பாடசாலையின் கல்வித் தரத்திற்கு சான்று பகர்கின்றன.
பெற்றோர்கள் அங்கம் வகிக்கும் நிர்வாகக் குழுவானது பாடசாலை நிர்வாகத்தைச் சிறப்புற நடாத்துகின்றது. எமது சமுதாயத்தின் தமிழ்க் கல்வியாளர்களும், தமிழ் ஆர்வலர்களும் தன்னார்வத் தொண்டர்களாகத் தமிழ் கற்பிக்கின்றார்கள். பெற்றோரும் மற்றுமுள தமிழ் பற்றாளர்களும் பாடசாலையின் பல்வேறு நடவடிக்கைகளிற்கு உதவுகின்றார்கள். இவர்கள் எல்லோருடைய அயராத உழைப்பினால் பாடசாலை தொடர்ந்து தமிழ்ப் பணியினை செவ்வனே செய்துவருகின்றது.
இப்பாடசாலையில் சிறார்களுக்கு தமிழ் மொழியைப் பேச, எழுத, வாசிக்கக் கற்பிப்பதுடன் மட்டும் நின்றுவிடாது அவர்கள் சபை முன் தமிழில் பேசுவதற்கும் சந்தர்ப்பங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன. மாணவர்கள் தமிழ் மொழியில் பேசும் ஆற்றலை ஊக்குவிக்கும் முகமாக இரண்டாம் தவணை ஆரம்பத்தில் பேச்சுப் போட்டியின் ஒரு கூறாக வாய்மொழித் தொடர்பாடல் போட்டியும் நடாத்தப்படுகின்றது. மாணவர்களின் தமிழ் அறிவை மேம்படுத்துவதற்காக மூன்றாம் தவணையில் தமிழ் அறிவுப் (வினாவிடை) போட்டிகள் நடாத்தப்படுகின்றன. எமது இணையத் தளத்தில் உள்ள பாடசாலை நாட்காட்டியில் இப்போட்டிகள் நடைபெறும் திகதிகளை பார்வையிடலாம்.
இத்துடன் மூன்றாம் தவணையின் நடுப்பகுதியில் நடாத்தப்படும் கலைவிழா நிகழ்ச்சிகளில் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து பங்குபற்ற வைப்பதன் மூலம் மாணவர்களின் முத்தமிழ் (இயல், இசை, நாடகம்) அறிவும், திறனும் வளர்க்கப்படுகின்றன. இவை தவிர மாணவர்களின் கற்கும் ஆற்றலை ஊக்குவிக்குமுகமாக வகுப்பு மற்றும் வீட்டு வேலைகள் மூலம் மாணவர்களது எழுத்து மற்றும் வாசிப்புத் திறன்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
மாணவர்களின் கற்கும் ஆற்றலையும் ஆளுமையையும் ஊக்குவிக்குமுகமாக நடாத்தப்படும் பேச்சுப் போட்டிகளிலும், வாய்மொழித் தொடர்பாடல் போட்டிகளிலும், தமிழ் அறிவுப் (வினாவிடை) போட்டிகளிலும், எழுத்து மற்றும் வாசிப்பு மதிப்பீடுகளிலும் பங்குபற்றும் மாணவர்களுக்கு வருட இறுதியில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் பரிசுக் கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. மேலும் ஒவ்வொரு வாரமும் மாணவர்கள் பாடசாலைக்கு வந்து தமிழ் கற்பதை ஊக்குவிக்கும் முகமாக நூறு சதவீத வரவிற்கு பரிசளிப்பு விழாவில் சிறப்புச் சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கப்படுகின்றன.
1988ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை இக்கல்வி நிலையமானது நியூ சவுத்வேல்ஸ் பாடசாலைத் தவணைகளில் வரும் சனிக்கிழமைகளில் பிற்பகல் 2:00 மணி தொடக்கம் 4:30 மணி வரை வென்ற்வேத்வில் டார்சி வீதி ஆரம்பப் பாடசாலையில் (Darcy Road Public School,Wentworthville) நடைபெற்று வந்தது.
2004ம்ஆண்டு, இக்கல்வி நிலையமானது, வென்ற்வேத்வில் டார்சி வீதி ஆரம்பப் பாடசாலையில் (Darcy Road Public School,Wentworthville) இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. முதலாம் பிரிவுக்கு பிற்பகல் 1:00 மணி முதல் 3:15 மணி வரையும், இரண்டாம் பிரிவுக்கு பிற்பகல் 3:00 மணி முதல் 5:30 மணி வரையும் வகுப்புகள் நடைபெற்றன.
2005ம் வருடத்திலிருந்து 2010ம் வருடம் வரை இக்கல்வி நிலையமானது, இரண்டு வளாகங்களாக வென்ற்வேத்வில் டார்சி வீதி ஆரம்பப் பாடசாலையிலும் (Darcy Road Public School, Wentworthville) கிரவின் ஆரம்பப் பாடசாலையிலும் (Girraween Public School, Girraween) நடைபெற்றது. இரு பாடசாலைகளிலும் நியூ சவுத்வேல்ஸ் பாடசாலை வாரங்களின் சனிக்கிழமைகளில் பிற்பகல் 2:00 மணி தொடக்கம் 4:30 மணி வரை தமிழ் வகுப்புகள் நடைபெற்றன.
2011ம் வருடத்தில் இருந்து, இக்கல்வி நிலையமானது, இரு பிரிவுகளாக கீழ் வகுப்புகள் (இணைப்பு வகுப்பு உட்பட முன்பள்ளியிலிருந்து நான்காம் வகுப்புவரையுள்ள வகுப்புக்கள்), மேல் வகுப்புகள் (புகுநிலை வகுப்பு உட்பட ஐந்தாம் வகுப்பும் அதற்கு மேற்பட்ட வகுப்புக்களும்) என கிரவின் ஆரம்பப் பாடசாலையில் (Girraween Public School, Girraween) இயங்கி வருகின்றது.
2016ம் வருடத்தில் இருந்து, நடப்பு வருடத்தின் ஆடி 31ம் திகதி அன்று (July 31st) மூன்று அல்லது அதற்கும் கூடிய வயதை எய்தும் மாணவர்களுக்காக பாலர் பள்ளி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்தது.
2021ம் வருடத்தில் இருந்து, பாலர் பள்ளி மாணவர்களின் இசைவாக்கம் போதாமையினால், பாலர் பள்ளி மாணவர்களின் வயதெல்லை, நடப்பு வருடத்தின் ஆடி 31ம் திகதி அன்று (July 31st) மூன்றரை அல்லது அதற்கும் கூடிய வயதை எய்தும் மாணவர்கள் பாலர் பள்ளி வகுப்பிற்கு இணைக்கப்படலாம் என்று மாற்றப்பட்டது.
அத்தோடு, 2021ம் ஆண்டின் கோவிட் தொற்று காரணமாக கூகுள் வகுப்பறைகள் (Google Classrooms) உருவாக்கப்பட்டு இணையவழி கடைப்பிதல் மூலம் பாடசாலை இயங்கியது.
2023ம் வருடம் சித்திரை மாதத்தில் இருந்து இக்கல்வி நிலையமானது, இரண்டு வளாகங்களாக கிரவின் ஆரம்பப் பாடசாலையிலும் (Girraween Public School, Girraween) , மெட்ரலா வீதி ஆரம்பப் பாடசாலையிலும்(Metella Road Public School,Toongabbie) நடைபெறுகிறது.
- மெட்ரலா வீதி ஆரம்பப் பாடசாலையில் (Metella Road Public School,Toongabbie) சனிக்கிழமைகளில் பிற்பகல் 2:00 மணி தொடக்கம் 4:30 மணி வரையும்,
- கிரவின் ஆரம்பப் பாடசாலையில் (Girraween Public School, Girraween) சனிக்கிழமைகளில் பிற்பகல் 1:30 மணி தொடக்கம் 5:30 மணி வரையும் வியாழக்கிழமைகளில் மாலை 7.00 மணி தொடக்கம் 9.00 மணி வரையும் தமிழ் வகுப்புகள் நடைபெறுகின்றன.
மேலும் இவ்வருடத்தில் இருந்து(2023) ஆண்டு 12 வகுப்பு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா அறிமுகப்படுத்தப்பட்டு எமது பாடசாலையில் கற்று, உயர்தரத்தில் தமிழை ஒரு பாடமாக எடுத்த மாணவர்களுக்கு பட்டமளிக்கப்டுகிறது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது(2023) அனைத்து ஆண்டு 12 மாணவர்களுக்குமான பாடசாலையின் இலச்சினையுடன் தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் அம்சங்கள் வரையப்பட்ட மேலாடை (Hoodies).
மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தல் மற்றும், நிர்வாகப் பணிகளை எளிதாக்கல் போன்ற தேவைகளுக்காக 2023ம் ஆண்டு, ஒரு மாணவர் முகாமைத்துவ அமைப்பு (Student Management System) தேவையென பாடசாலை நிர்வாகத்தால் முடிவெடுக்கப்பட்டது. இதற்கமைய uEducateUs எனும் மென்பொருள் கொள்வனவு செய்யப்பட்டது. இம் மென்பொருளினுடாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்கிற அனைத்து தரப்பினரது தரவுகளையும் ஒருமுகப்படுத்தி இலகுவானமுறையில் தொடர்பாடல்களை மேற்கொள்ள உதவுகிறது. மாணவர்களது மதிப்பீட்டுப் புள்ளிகளை பதிவிட்டு, அவற்றை பகுப்பாய்வதனுடாக மாணவர்களது கல்வி தொடர்பான தீர்மானங்களை எடுக்கவும் துணையாக இருக்கிறது.
மேலும்(2023), மாணவர்களின் வருகை (attendance), தாமதமாக வருவது (Late arrival), முன்கூட்டியே செல்வதற்கான (Early departure) குறிப்புகள், ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் அறிக்கைகள்(Student reports) ஆகியவை uEducateUs மென்பொருளின் மூலம் செயல்படுத்தப்பட்டன.
2024 ம் ஆண்டு முதல், இணையத்தளத்தினூடாக மாணவர்களை பாடசாலையில் இணைத்துக்கொள்வதற்கான (student enrolment) முறைமையும், தாமதமாக வருவது (Late arrival), முன்கூட்டியே செல்வதற்கான (Early departure) குறிப்புகளை பெற்றோர்கள் பதிவு செய்யக்கூடிய(self check-in kiosk) முறைமையும் அறிமுகப்படுத்தப்பட்டன.
2025 ம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள்.
- uEducateUs இன் மேலதிக வசதிகளான பாடசாலை வசதிக் கட்டண அறவீடுகள், பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக்கான முன்பதிவுகள், மாணவர்களது மதிப்பீட்டு புள்ளிகளை வெளியிடுதல், மற்றும் அதிபர் விருதுகள் பதிவு செய்தல் ஆகியவை நடைமுறையில் கொண்டு வரப்பட்டன.
- ஆண்டு 10 RoSA வகுப்பு மாணவர்களுக்கான Record of School Achievement (RoSA) சான்றிதழ் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- இவ்வருடத்தின் ஆடி(July) மாதத்தில் (மூன்றாம் தவணை) இருந்து எமது கல்வி நிலையமானது பின்வரும் மூன்று வளாகங்களில் நடைபெறுகிறது
- 1. Pendle Hill High School இல் சனிக்கிழமைகளில் பிற்பகல் 1:30 மணி தொடக்கம் 5:30 மணி வரையும்
- 2. மெட்ரலா வீதி ஆரம்பப் பாடசாலையில் (Metella Road Public School,Toongabbie) சனிக்கிழமைகளில் பிற்பகல் 2:00 மணி தொடக்கம் 4:30 மணி வரையும்,
- 3. கிரவின் ஆரம்பப் பாடசாலையில் (Girraween Public School, Girraween) வியாழக்கிழமைகளில் மாலை 7.00 மணி தொடக்கம் 9.00 மணி வரையும் தமிழ் வகுப்புகள் நடைபெறுகின்றன.