இப்பாடசாலையில் சிறார்களுக்கு தமிழ் மொழியைப் பேச, எழுத, வாசிக்கக் கற்பிப்பதுடன் மட்டும் நின்றுவிடாது அவர்கள் சபை முன் தமிழில் பேசுவதற்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றது. மாணவர்கள் தமிழ் மொழியில் பேசும் ஆற்றலை ஊக்குவிக்கும் முகமாக இரண்டாம் தவணை ஆரம்பத்தில் பேச்சுப் போட்டியின் ஒரு கூறாக வாய்மொழித் தொடர்பாடல் போட்டியும் நடாத்தப்படுகின்றது. மாணவர்களின் தமிழ் அறிவை மேம்படுத்துவதற்காக மூன்றாம் தவணையில் தமிழ் அறிவுப் (வினாவிடை) போட்டிகள் நடாத்தப்படுகின்றன. எமது இணையத் தளத்தில் உள்ள பாடசாலை நாட்காட்டியில் இப்போட்டிகள் நடைபெறும் திகதிகளைப் பார்வையிடலாம்.
இத்துடன் மூன்றாம் தவணையின் நடுப்பகுதியில் நடாத்தப்படும் கலைவிழா நிகழ்ச்சிகளில் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து பங்குபற்ற வைப்பதன் மூலம் மாணவர்களின் முத்தமிழ் (இயல், இசை, நாடகம்) அறிவும், திறனும் வளர்க்கப்படுகின்றன. இவை தவிர மாணவர்களின் கற்கும் ஆற்றலை ஊக்குவிக்குமுகமாக வகுப்பு மற்றும் வீட்டு வேலைகள் மூலம் மாணவர்களது எழுத்து மற்றும் வாசிப்புத் திறன்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
மாணவர்களின் கற்கும் ஆற்றலை ஊக்குவிக்குமுகமாக நடாத்தப்படும் பேச்சுப் போட்டிகளிலும்இ வாய்மொழித் தொடர்பாடல் போட்டிகளிலும், தமிழ் அறிவுப் (வினாவிடை) போட்டிகளிலும், எழுத்து மற்றும் வாசிப்பு மதிப்பீடுகளிலும் பங்குபற்றும் மாணவர்களுக்கு வருட இறுதியில் நடைபெறும் வருடாந்தப் பொதுக்கூட்டம் மற்றும் இராப்போசன விருந்து என்பவற்றோடு கூடிய பரிசளிப்பு விழாவில் பரிசுக் கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.